பால் உற்பத்தியாளர்களுக்கான இழப்பீடு தொகை உயர்வு- அரசாணை வெளியீடு
- திருமண உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- பால் ஊற்றும் உறுப்பினர்களிடம் இருந்து மாதத்துக்கு பெறப்படும் சந்தா தொகை 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதியத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் இதர நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவிகள் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இந்த விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
பால் உற்பத்தியாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடுத் தொகை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், ஒரு பெண் குழந்தைக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், விபத்தில் ஊனமுற்ற பால் உற்பத்தியாளர் ஓர் உறுப்பை இழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும், 2 உறுப்பை இழந்தால் ரூ.1.75 லட்சத்தில் இருந்து ரூ.2.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதை செயல்படுத்த பால் ஊற்றும் உறுப்பினர்களிடம் இருந்து மாதத்துக்கு பெறப்படும் சந்தா தொகை 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சங்கம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் இருந்து மாதத்திற்கு பெறப்படும் சந்தா தொகை 50 பைசாவில் இருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.