தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்கள் தமிழ் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்- ஐகோர்ட் மதுரை கிளை
- தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தமிழ் வழியில் கல்வி கற்பது இல்லை.
- ஒவ்வொரு மாநிலத்தின் அரசுப்பணியாளர்கள் அந்தந்த மாநில மொழியை தெரிந்து இருப்பது அவசியம்.
மதுரை:
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் தேனி மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக 2018-ம் ஆண்டில் சேர்ந்தார். இவர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்தவர். இதனால் பணியில் சேர்ந்த 2 ஆண்டுக்குள் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தமிழ் மொழித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அவர் இந்த நிபந்தனையை நிறைவேற்றாததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி ஜெய்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழகத்தில் அலுவல் மொழி தமிழ். அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில்தான் நடைபெறுகின்றன. மின்வாரியத்திலும் இந்த நடைமுறை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஊழியருக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற மின்வாரியத்தின் நிலைப்பாட்டில் தவறு கிடையாது.
இருந்தபோதும் மனுதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் மீண்டும் தமிழ் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி மீண்டும் நடந்த தேர்விலும் ஜெய்குமார் வெற்றி பெறாததால் அவரை பணி நீக்கம் செய்து மின்வாரிய பொறியாளர் உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் ஜெய்குமார் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் மனுதாரர் தமிழகத்தை சேர்ந்த பச்சை தமிழன் என்று கூறி இவருக்கு பணி வழங்க வேண்டும் என 2022-ம் ஆண்டில் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு, அரசு ஊழியர்களின் பணி வரன்முறை விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தமிழ் வழியில் கல்வி கற்பது இல்லை. தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறுவதும் இல்லை. இந்த சூழ்நிலையில் மனுதாரர் தமிழ்த்தேர்வில் தேர்ச்சி பெறாமல் தமிழக அரசு பணியில் மட்டும் எப்படி நீடிக்க முடியும்? சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்துவிட்டு தமிழக அரசு வேலைக்கு வருவது ஏன்? தமிழக அரசு துறைகளில் தமிழ்மொழி தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்? என கேள்வி எழுப்பினர்.
மேலும், ஒவ்வொரு மாநிலத்தின் அரசுப்பணியாளர்கள் அந்தந்த மாநில மொழியை தெரிந்து இருப்பது அவசியம். அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்கள் தமிழ் மொழியை பேசவும், எழுதவும் தெரிந்திருக்கவும் வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
விசாரணை முடிவில், இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.