தமிழ்நாடு

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு: 11 ஆயிரம் தி.மு.க.வினர் மீது வழக்கு

Published On 2025-03-11 10:17 IST   |   Update On 2025-03-11 10:17:00 IST
  • சென்னையில் 32 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சென்னையில் மட்டும் 25 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் பேசும்போது தி.மு.க. எம்.பி.க்கள் நாகரீகம் இல்லாதவர்கள் போல நடந்து கொள்வதாக கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நேற்று மாலையில் தர்மேந்திர பிரதானின் உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 125 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பங்கேற்று தர்மேந்திர பிரதானின் உருவப் பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் 32 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சென்னையில் மட்டும் 25 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களிலும் தி.மு.க.வி னர் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News