பள்ளி கட்டிடங்களை பராமரிக்க விதிகளை உருவாக்க வேண்டும்- தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
- கடந்த 2016-ம் ஆண்டு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் விஷால் உயிரிழந்தான்.
- உயிரிழந்த மாணவர் விஷாலின் தந்தை வீரப்பனுக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
சென்னை:
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா குடுமியம்பட்டியை அடுத்த அச்சல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் விஷால், குடுமியம்பட்டி அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 2016-ம் ஆண்டு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் விஷால் உயிரிழந்தான். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.
பின்னர், இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர், தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி அவர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'பள்ளி சுற்றுச்சுவரை தாண்டி விழுந்த வகுப்பறை சாவியை ஆசிரியை ஒருவர் எடுத்து வரும்படி கூறியதை தொடர்ந்து மாணவன் விஷால் சுற்றுச்சுவரில் ஏறிய போது சுவர் விழுந்ததில் மாணவன் இறந்தது தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் சேதம் அடைந்த கட்டிடங்களை சீரமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
பொது ஊழியர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர், சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது. எனவே, உயிரிழந்த மாணவர் விஷாலின் தந்தை வீரப்பனுக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகளின் கட்டிடங்களை பராமரிக்கும் வகையிலும், பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் இதர கட்டிடங்களின் தற்போதைய நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலும் விதிகளை உருவாக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க கல்வி அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும்,
மாதம்தோறும் குறிப்பாக மழைக்காலம் மற்றும் விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கும் காலங்களில் ஆய்வு கூட்டத்தை நடத்தவும் தொடக்கக்கல்வி இயக்குனரகத்துக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.