அதிமுகவினர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
- திமுக அரசின் பொய்முகங்கள் தோலுரிவதும், பொய் விளம்பர மாடல் ஸ்டாலினின் அரசுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அதிமுக இளைஞர்களை வழக்குப் போட்டு, கைது செய்து அடக்கிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினின் திமுக அரசு எத்தனிப்பது, கண்டிக்கத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் #யார்_அந்த_SIR என்ற கேள்வியுடன், #SaveOurDaughters என்ற விழிப்புணர்வு வாசகத்துடன், சென்னையில் பிரபல வணிக வளாகம் ஒன்றில் மக்களிடையே மிகவும் அமைதியாக, ஒழுக்கத்துடன் கவன ஈர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்களை கண்டு பதற்றம் அடைந்த விளம்பர மாடல் ஸ்டாலின் அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதிந்திருப்பதற்கு எனது கடும் கண்டனம்.
தேசிய ஊடகம் வரை கவனத்தை ஈர்த்து, பொதுமக்களின் பேராதரவை அதிமுக-வின் போராட்டங்கள் பெறுவதும்,
இந்த விடியா திமுக அரசின் பொய்முகங்கள் தோலுரிவதும், பொய் விளம்பர மாடல் ஸ்டாலினின் அரசுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த வழக்கு குறித்த ஒரு முக்கியமான கேள்வியையும், பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், பொதுமக்கள் கூடும் இடத்தில், எவ்வித இடையூறும் இன்றி சமூக அக்கறை கொண்டு அறவழியில் மேற்கொண்ட அதிமுக இளைஞர்களை வழக்குப் போட்டு, கைது செய்து அடக்கிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினின் திமுக அரசு எத்தனிப்பது, கண்டிக்கத்தக்கது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்ட இவ்வழக்கை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.