எடிட் புகைப்படம்: ஹார்ட் டிஸ்கை வாங்கி சீமானிடம் கொடுத்ததே நான்தான்- ராஜீவ் காந்தி
- புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
இதனிடையே, 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள்.. அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று சீமான் கூறியிருந்தார்.
இந்நிலையில், புகைப்படம் இருந்த ஹார்ட் டிஸ்கை வாங்கி கொடுத்ததே நான்தான் என்று திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ் காந்தி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர்அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
"வெங்காயம்" பட இயக்குனர் ஒரு படத்தை வெளியிட்டார். செங்கோட்டையன் என்ற நபர் கொடுத்ததாக கூறினார். ஆனால் சொங்கோட்டையன் இறந்துவிட்டார். அது சீமானுக்கு தெரியாது என நினைக்கிறேன்.
செங்கோட்டையன் என்பவர் ஹார்ட் டிஸ்க் ஒன்றை கொடுத்தபோது, அதை வாங்கியது இந்த அப்பாவி ராஜீவ் காந்திதான். அப்போ தான் உள்ளே படம் இருந்தது தெரிந்தது. அவை ஒட்டி வெட்டிய படங்கள்.
ஆதாரங்களை நாங்கள் கொடுத்துவிட்டோம். எடிட் செய்தவரும் உண்மையை உடைத்துவிட்டார். ஹார்ட் டிஸ்கை வாங்கிய நானும் சொல்லிவிட்டேன். கொடுத்தது செங்கோட்டைன் இல்லை என்றால் ஆதாரத்தை கொடுத்துவிட்டீர்களாக என்று நீங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்.
ஊடகம் அறம் என்பது நீங்கள் எந்த மாற்று கொள்கையாக இருந்தாலும் விமர்சனம் செய்வது வேறு. ஆனால், இப்படி பொய் கூறும்போது தயவு செய்து ஆதாரத்தை கேளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.