நிதியை நிறுத்திவைப்பது பிளாக்மெயில் நடவடிக்கை: திருமாவளவன்
- பிஎம்ஸ்ரீ பள்ளியை நாங்கள் திறக்க முடியாது என்பதை வைத்துக் கொண்டு நிதி தர மறுக்கிறது.
- ஏற்கனவே நடைமுறையில் உள் எஸ்எஸ்ஏ நிதியை நிறுத்திவைப்பது பிளாக்மெயில் நடவடிக்கை.
மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் இன்று திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது மும்மொழி கொள்கை மற்றும் பள்ளி கல்வித்துறைக்கு நிதி விடுவிக்காதது குறித்த கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்து கூறியதாவது:-
இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக திணிப்பது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் ஏற்கனவே இருமொழி கொள்கை செயல்படுத்துகிற அரசு இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும். பிஎம்ஸ்ரீ பள்ளியை நாங்கள் திறக்க முடியாது என்பதை வைத்துக் கொண்டு, ஏற்கனவே நடைமுறையில் உள் எஸ்எஸ்ஏ நிதியை நிறுத்திவைப்பது பிளாக்மெயில் நடவடிக்கை. அச்சுறுத்தும் நடவடிக்கை. இதை இந்திய அரசு கைவிட வேண்டும். நிதியை தர வைப்போம். தர வைப்பதற்கான வகையில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
இவ்வாறு கூறினார்.
மேலும் கண்டன பொதுக்கூட்டத்தில் "தமிழ்நாடு மீண்டும் ஒரு மொழிப்போராட்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று மத்திய பாஜக அரசை எச்சரிக்கிற அறப்போராட்டம்தான் இது" என்றார்.