ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது
- சுயேச்சை வேட்பாளர்களும் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்டு வருகிறார்கள்.
- வருகிற 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் முகாமிட்டு தினந்தோறும் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். தொண்டர்களும் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்கள். சுயேச்சை வேட்பாளர்களும் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்டு வருகிறார்கள்.
இதனால் இடைத்தேர்தல் பிரசாரம் களைகட்டியிருந்தது. இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. அதைத்தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வருகிற 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.