தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும் - பதிவுத்துறை அறிவிப்பு
- இந்த நிதியாண்டில் 2-வது முறையாக அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.
- விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும்.
சென்னை:
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 5-ந் தேதியன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238 கோடியே 15 லட்சம் வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கடந்த 31-ந்தேதி 23 ஆயிரத்து 61 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ.231 கோடியே 51 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 2-வது முறையாக அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.
மேலும், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்துக்கள் குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.