தென்மாநிலங்கள் 26 இடங்களை இழக்க நேரிடும்: ப.சிதம்பரம் எச்சரிக்கை
- 2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும்.
- மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும்.
தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்களவை தொகுதி இடங்கள் குறையும் என அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். மறுசீரமைப்பு குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. மத்திய அரசு இது தொடர்பாக தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:-
2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும். எங்களுடைய கணக்கிட்டின்படி, மாநிலங்களின் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும். தென்மாநிலங்கள் 26 இடங்களை இழக்கும். மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை அதிக இடங்களை பெறும்.
129 இடங்களுடன் நம்முடைய குரல்கள் பாராளுமன்றத்தில் கேட்கப்படவில்லை. 103 இடங்களுடன் நிலைமை மோசமாக இருக்கும்.
தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பை நாங்கள் முன்மொழிகிறோம். அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் இடங்கள் மறுவரை செய்யப்படு வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.