ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவக்கம்
- வாக்குப்பதிவு மாலை 6.00 மணிக்கு நிறைவு பெறுகிறது.
- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்தத் தொகுதிக்கு கடந்த மாதம் 7-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஒட்டி தொகுதி முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தத் தொகுதியில் உள்ள அரசின் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் வாக்களிக்க வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.