விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
- பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
- கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்த கோரி பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ராஜா தலைமை தாங்கினார். சி.பி.எம். ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 வீதம் 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,ஆவின் கலப்பு தீவனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தீர்ப்பின்படி ஆரம்ப சங்கங்களில் இருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதே போல் பழனி தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ராமப்பட்டினம் புதூர், கன்னிவாடி, வேடசந்தூர் புது ரோடு, குஜிலியம்பாறை ஆனைப்பட்டி, வத்தலக்குண்டு, விருவீடு, திண்டுக்கல் அரசனம்பட்டி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.