உள்ளூர் செய்திகள்

சிங்கம்புணரி அருகே 20 ஆண்டு பகையை மறந்து பங்குனி பொங்கல் திருவிழா

Published On 2025-03-18 10:41 IST   |   Update On 2025-03-18 10:41:00 IST
  • மேலாடையின்றி புனித நீராடி வினோத வழிபாடு.
  • 108 முறை நான்கு திசைகள் நோக்கி பூமியை தொட்டு கும்பிட்டனர்.

சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற மலையாள சாத்தையா அய்யனார் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லியார், அய்யனார் சுவாமிகள் அருள்பாலித்து வரும் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் விழா 20 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதாவது இந்த திருவிழாவை நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட போட்டி, பிரச்சினை காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக இக்கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடத்தப்படாமல் இருந்தது.

இதனால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பகையை மறந்து பாரம்பரிய முறைப்படி இந்த ஆண்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக 20 ஆண்டு பகையை மறந்து ஊரே ஒன்றுபட்டு பங்குனி பொங்கல் நடத்த முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் மலையாள சாத்தையா அய்யனார் கோவில் அருகே உள்ள செவந்தான் ஊரணியில் ஆண்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் புனித நீராடினர்.

பகை ஏற்பட்ட போது ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர். அந்த சாபம் நீங்குவதற்காக கிராமத்தினர் இந்த புனித நீராடலில் ஈடுபட்டனர்.

அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் வரிசையாக கைகளை கட்டிக்கொண்டு நின்றவாறு புனித நீராடி 108 முறை நான்கு திசைகள் நோக்கி பூமியை தொட்டு கும்பிட்டனர்.


அதனைத் தொடர்ந்து ஊர் மந்தையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய முறைப்படி வரிசையாக தலையில் பொங்கல் கூடை சுமந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மலையாள சாத்தையா அய்யனார் கோவிலை வந்த டைந்தனர். பின்னர் அங்கு அனைவரும் பொங்கல் வைத்தனர்.

பின்னர் ஸ்ரீவில்லியார் சுவாமிக்கு மஞ்சிகள் கட்டிய பசுமாடுகள் காளைகள் ஆங்காங்கே வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த பங்குனி பொங்கல் விழாவில் கிராம பொதுமக்கள், பரம்பரை அறங்காவலர்கள், அனைத்து கோவில் பூசாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் மத நல்லிணத்தித்திற்கு அடையாளமாக கரிசல்பட்டி இஸ்லாமியர்கள் அய்யனார் கோவிலுக்கு இந்து பாரம்பரிய முறைப்படி தேங்காய், பழம், தலைவாழை இலை சீர் எடுத்து வருகை தந்து பூசாரியிடம் வழங்கினர்.

20 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி பொங்கல் திருவிழா நடந்துள்ளதால் வரும் காலங்களில் தங்கள் கிராமம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் உள்ளனர். 

Tags:    

Similar News