தமிழ்நாடு

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லி சென்ற விவசாயிகள்

Published On 2025-01-21 12:33 IST   |   Update On 2025-01-21 13:59:00 IST
  • விவசாயிகள், வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
  • தமிழக அரசும் இந்த திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.

மதுரை:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்லுயிர் தளமான அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் சுற்றுச்சூழல், விவசாயம் பாதிக்கும் என கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

மேலும் விவசாயிகள், வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த மாத தொடக்கத்தில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூரில் இருந்து லட்சக்கணக்கானோர் மதுரைக்கு பேரணியாக புறப்பட்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசும் இந்த திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதற்கிடையில் மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கூறி தற்போது வரை அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக தங்களது கோரிக்கைகளை மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிசான் ரெட்டியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி அந்த பகுதியை சேர்ந்த விவசாய சங்க பிரமுகர்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் புறப்பட்டனர்.

இந்த குழுவில் ஒருங்கிணைப்பாளர்களாக பா.ஜனதாவை சேர்ந்த மகா சுசீந்திரன், பேராசிரியர் ராம சீனிவாசன், ராஜ சிம்மன், பாலமுருகன் ஆகியோர் செயல்பட்டனர்.

இவர்களுடன் கிராம விவசாயிகள் மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், முருகேசன், முத்துவீரனன், சாமிக்கண்ணு, ஆனந்த் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.

Tags:    

Similar News