பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- ஜி.கே. வாசன்
- போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதும் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
- தமிழக அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி போதைப்பொருட்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துக்கொண்டே போவதற்கு காரணம் சட்டம் ஒழுங்கில் தமிழக அரசின் கவனமின்மையே.
சென்னை, பழவந்தாங்கலில் பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு நடைபெற்றது மிகவும் கண்டிக்கத்தக்கது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் 25 வயதான பெண் காவலர் நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு 10.30 மணி அளவில் மக்கள் நடமாட்டம் உள்ள ரெயில் நிலைய நடைபாதையில் நடந்து சென்ற போது அவரை பாலியல் தொந்தரவு செய்து, செயினை பறித்ததால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிக்கிறார்.
பாலியல் தொந்தரவு செய்த நபர் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த குற்றச்செயலுக்கு காரணம் போதைப்பொருள் என்பதும், போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதும் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
எனவே தமிழக அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி போதைப்பொருட்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பாலியல் தொந்தரவு செய்யும் குற்றவாளிகளை கைது செய்வதோடு, கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் மீதும், சட்டம் ஒழுங்கின் மீதும் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயமே இல்லை. காரணம் குற்றத்திற்கான தண்டனை குறைவானதாக இருப்பதோடு, குற்றச்செயலில் இருந்து தப்பிப்பதற்கு சாதகமான சூழல் நிலவுவதும் தெரிகிறது.
எனவே பெண் காவலருக்கு நேர்ந்த கொடுமை இனி காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமல்ல வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் நடைபெறக்கூடாது என்பதற்கு ஏற்ப தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு, மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க, போதைப்பொருளை அழித்து, போதைப்பொருள் பழக்கத்தில் இருக்கும் நபர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.