தனக்கு அரசியல் புரிதல் இல்லை என அவரே வெளிக்காட்டிக் கொள்கிறார்- விஜய்க்கு டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி
- அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்போது இதுபோன்ற சிக்கல்கள் வரும்.
- புதிதாக கட்சி தொடங்கிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தால் உடனே ஆட்சியில் இருப்பவர்களைதான் கடிந்துக் கொள்வார்கள்.
விஜய்யின் பேச்சுக்கு திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தனக்கு அரசியல் புரிதல் இல்லை என்பதை அவரே வெளிகாட்டிக் கொள்கிறார். 1938ம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி போய் காங்கிரஸ் ஆட்சி வந்த உடனேயே இந்தி மொழி திணிக்கப்பட்டது.
அன்றைக்கே தமிழகத்தில் தமிழ் அறிஞர்கள் அனைவரும் இந்திக்கு எதிராக திராவிடக் கட்சி தலைவர்கள் அனைவரும் போராட்டத்தை நடத்தி திருச்சியில் இருந்து சென்னை வரை நடந்தே வந்து போராட்டம் நடத்தி மக்களிடம் கருத்தை பரப்பினார்கள். இதெல்லாம் அவருக்கு தெரியாது.
1952ல் மீண்டும் இங்கே முதல் தேர்தலில் ராஜாஜி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி மொழி கற்பிக்கப்படும் என்று கூறியபோது அதையும் எதிர்த்து போராடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
1957ல் இரண்டே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட நேரத்தில் ஈவிகே சம்பத் அவர்கள் நேருவிடம் இந்தி மொழியை திணிக்கக்கூடாது என்று பேசினார். அப்போது நேரு உத்தரவாதமாக இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கும் என்று ஒரு உத்தரவாதம் அளித்தார்.
அனுபவமின்னை. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்போது இதுபோன்ற சிக்கல்கள் வரும். அது அவருடைய அறியாமை.
திமுக என்ன செய்திருக்கிறது. திராவிடக் கழகம் தமிழை காப்பாற்ற என்ன செய்திருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக எத்தகைய போராட்டம் நடத்தி இருக்கிறது ? எவ்வளவு உயிர்களை பலி கொடுத்திருக்கிறது ?என்பதெல்லாம் விஜய்க்கு தெரியாது.
புதிதாக கட்சி தொடங்கிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தால் உடனே ஆட்சியில் இருப்பவர்களைதான் கடிந்துக் கொள்வார்கள். அவர்கள் மீது குறை சொல்வார்கள்.
அந்த குறையில் எதுவும் நியாயம் இருக்கிறதா ? என்று அவர்களுக்கு சிந்தித்து பார்ப்பதற்கு கூட தெரியாது. இந்தி மொழி பிரச்சினையிலும் அப்படிதான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.