சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்- பொதுமக்கள் அவதி
- சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
- செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும் பனி மூட்டத்தால் சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
அதேபோல், தென்மாவட்டங்களில் இருந்து வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. பனி அதிகமாக இருக்கும் பகுதிகளில் குறைந்த வேகத்தில் ரெயிலை இயக்குமாறு ரெயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.