தமிழ்நாடு

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவை சர்வதேச அளவில் மேம்படுத்த திட்டம்

Published On 2025-02-07 09:07 IST   |   Update On 2025-02-07 09:07:00 IST
  • புறநோயாளிகள் பிரிவை மேம்படுத்துவதற்காக சுகாதாரத்துறை ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரியுள்ளது.
  • புறநோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சைக்காக தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

சென்னை:

ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு ஆஸ்பத்திரியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி திகழ்ந்து வருகிறது. அதிநவீன சிகிச்சைகளுக்காக தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். எனவே ஆஸ்பத்திரியை தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக மேம்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

அந்தவகையில், ஆஸ்பத்திரியில் டவர்-3 தரைதளத்தில் செயல்படும் புறநோயாளிகள் பிரிவை சர்வதேச அளவிற்கு மேம்படுத்துவதற்காக சுகாதாரத்துறை ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரியுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் பொதுப்பணித்துறை மேற்பார்வையில் நடைபெறும். புறநோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சைக்காக தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகரான அதிநவீன வசதிகளுடன் சிகிச்சை அளிக்கும் விதமாக புறநோயாளிகள் பிரிவை சர்வதேச அளவிற்கு மேம்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை இறங்கியுள்ளது. இந்த பணியின் மூலம் புறநோயாளிகள் பிரிவில் குளிர்சாத வசதி, புதிய இருக்கைகள், நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நோயாளிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால் புறநோயாளிகள் பிரிவில் செயல்பட்டுவரும் பொது மருத்துவம், பொது அறுவை புறநோயாளிகள் பிரிவு, எலும்புகளுக்கான புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் அடுத்த வாரம் முதல் ஆஸ்பத்திரியில் உள்ள வேறு இடத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது. கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் புறநோயாளிகள் பிரிவு வருகிற ஏப்ரல் மாதம் நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News