மாணவிக்கு பாலியல் தொல்லை- பள்ளி நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது
- போலீசார் வசந்தகுமாரை மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
- போராட்டம் நள்ளிரவை கடந்தும் நீடித்ததால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த 4-ம் வகுப்பு மாணவியிடம், பள்ளி பெண் நிர்வாகி ஒருவரின் கணவரான வசந்தகுமார்(வயது 54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சோர்வடைந்த மாணவி மாலையில் வீட்டிற்கு சென்றதும், நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக பள்ளிக்கு விரைந்து இதுகுறித்து கேட்டறிந்ததுடன் மணப்பாறை போலீசிலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வசந்தகுமாரை மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் உள்ளிட்டோர் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கினர். மேலும் பள்ளி அலுவலக கண்ணாடிகளையும், அங்கிருந்த பூந்தொட்டிகளையும் நொறுக்கினர். அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். நீண்ட நேரமான நிலையில் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நொச்சிமேடு பகுதியில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நள்ளிரவை கடந்தும் நீடித்ததால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மற்றும் மணப்பாறை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.