தமிழ்நாடு

ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்ட வாலிபர் கைது

Published On 2025-02-07 10:44 IST   |   Update On 2025-02-07 10:44:00 IST
  • திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்கள் பொது பெட்டியில் ஏறி பயணம் செய்தார்.
  • ரெயிலில் இருந்து கீழே விழுந்த ரேவதிக்கு கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை:

திருப்பூரை சேர்ந்தவர் ஜமினி ஜோசப். இவரது மனைவி ரேவதி. இவர் வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். தற்போது ரேவதி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த மங்கள சமுத்திரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு செல்ல ரேவதி முடிவு செய்தார். அதன்படி கணவருடன் ரேவதி திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தார்.

திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்கள் பொது பெட்டியில் ஏறி பயணம் செய்தார். ரெயில் ஜோலார்பேட்டை வந்தவுடன் சக பெண் பயணிகள் இறங்கிவிட்டனர். ரேவதி மட்டும் தனியாக இருந்தார்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் (வயது 28) என்பவர் பெண்கள் பொது பெட்டியில் ஏறினார். அப்போது ரேவதி இது பெண்கள் பெட்டி என்று கூறினார். அதற்கு ஹேமராஜ் அவசரமாக ஏறி விட்டதாகவும், அடுத்த ரெயில் நிலையம் வந்தவுடன் இறங்கி விடுவதாக கூறி அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் ரெயில் பெட்டியின் கழிவறைக்கு சென்றார். பேண்ட் மற்றும் சட்டை இல்லாமல் ரேவதியின் முன்னால் அரை நிர்வாணத்துடன் வந்து நின்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி கத்தி கூச்சலிட்டார். திடீரென ரேவதியை சரமாரியாக வாலிபர் தாக்கினார்.

கர்ப்பிணி என்றும் பாராமல் அவரிடம் தவறாக நடக்க முயன்றார். வாலிபரிடமிருந்து தப்பிக்க கர்ப்பிணி போராடினார்.

இதில் ஆத்திரமடைந்த ஹேமராஜ் அவரது தலைமுடியை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். ரெயில் காட்பாடி வந்தவுடன் ஹேமராஜ் அங்கிருந்து இறங்கி தப்பி சென்றார்.

ரெயிலில் இருந்து கீழே விழுந்த ரேவதிக்கு கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்து ஜோலார்பேட்டை ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த கர்ப்பிணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ரெயில்வே எஸ்.பி. உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு ஹேமராஜை தேடி வந்தனர். காட்பாடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஹேமராஜை இன்று அதிகாலை அவரது வீட்டின் அருகே சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஹேமராஜ் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் இருந்து ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் செல்போன் பறித்ததும், காட்பாடி அருகே வந்தவுடன் இளம்பெண்ணை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதும் தெரிந்தது.

2023-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து காட்பாடிக்கு அழைத்து வந்ததும், அங்கு வைத்து இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து ஜாமினில் வெளியே வந்ததும் தெரிந்தது. மேலும் இது சம்பந்தமாக போலீசார் ஹேமராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News