தமிழ்நாடு
ஆண்டின் முதல் நாளிலேயே முடங்கிய ரெயில்வே முன்பதிவு இணையதளம் - ஊருக்கு சென்றவர்கள் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
- விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பயணிகள் 'தக்கல்' டிக்கெட் எடுக்க முடியாமல் தவித்தனர்.
- டிசம்பரில் இருந்து இதுவரை 4 முறை ரெயில்வே இணையதள சர்வர் முடங்கியதால் பொதுமக்கள் ரெயில்வே துறைக்கு புகார் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
நாடு முழுவதும் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் சர்வர் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 3 முறை முடங்கியது. இந்த நிலையில் ஆண்டின் தொடக்க நாளான புத்தாண்டில் இன்றும் இந்த இணையதளம் முடங்கிவிட்டது. இதனால் முன்பதிவு செய்ய காத்திருந்த ரெயில் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
அதிலும் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பயணிகள் 'தக்கல்' டிக்கெட் எடுக்க முடியாமல் தவித்தனர்.
முன்பதிவு செய்வதற்கு இ-சேவை மையங்களுக்கு சென்றவர்கள் பல மணி நேரம் காத்திருந்து கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். டிசம்பரில் இருந்து இதுவரை 4 முறை ரெயில்வே இணையதள சர்வர் முடங்கியதால் பொதுமக்கள் ரெயில்வே துறைக்கு புகார் தெரிவித்து வருகின்றனர்.