தமிழ்நாடு

மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை... கனிமொழி சாடல்

Published On 2025-02-16 11:26 IST   |   Update On 2025-02-16 11:26:00 IST
  • மீனவர்கள் கைது நடவடிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
  • தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை.

ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை அரசு, அவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் மீனவர்கள் அவ்வப்போது விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதித்தும், அதனை கட்டத்தவறினால் மீண்டும் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது.

பாரம்பரிய பகுதியில் பாதுகாப்பான முறையில் மீன் பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ராமேசுவரத்தில் மீன்பிடி தொழிலை நம்பி மீனவர்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மீனவர்கள் கைது நடவடிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.

ஆனாலும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. இது கண்டனத்திற்குரியது என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., மீனவர் சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள், மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News