அன்னா ஹசாரே போன்று விஜய் ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா?- அமைச்சர் சேகர்பாபு
- வடசென்னை வளர்ச்சி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.
- பிராட்வே பஸ் நிலையத்தை பொறுத்தவரை ரூ.800 கோடி செலவில் மேம்படுத்தப்பட இருக்கிறது.
சென்னை:
சென்னையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஓட்டேரியில் இன்று பொதுமக்களின் குறைகளை கேட்டார். அப்போது த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதன் விவரம் வருமாறு:-
கே: த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். போராட்டக் களத்துக்கு வந்துள்ளாரே?
ப: அன்னா ஹசாரே மாதிரி தொடர்ந்து ஒரு வருடம் உண்ணாவிரதம் இருந்தாரா? அது கடந்து சென்று விட்டது. நேற்றைய நிகழ்வு நேற்றோடு முடிந்து விட்டது. இன்றைய மக்கள் பணியை சூரியன் உதிப்பதற்கு முன்பாக ஆரம்பித்து உள்ளோம். நடு இரவில் தான் மக்கள் பணியை முடித்து இல்லம் திரும்புவோம். இது திராவிட முன்னேற்றத்தின் நிலை.
கே: சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் எப்போது வேலைகள் தொடங்கப்படும்?
ப: வடசென்னை வளர்ச்சி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி கொண்டிருக்கிறார். ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேலாக 248 பணிகளை எடுத்திருக்கிறோம். இதில் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.1800 கோடியை பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கி உள்ளது.
அதில் சீரான கழிவுநீர் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மக்களுக்கு தேவையான கட்டமைப்புகள், பள்ளிகள், பூங்காக்கள், சமுதாய கூடங்கள், அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், இப்படி அனைத்து வகையிலும் ஒரு பெரிய வல்லுனர் குழுவை அமைத்து 2 ஆயிரம் கல்லூரி மாணவர்களை வைத்து வடசென்னை முழுவதும் ஒருவார காலம் ஆய்வு செய்து அந்த ஆய்வின் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
பிராட்வே பஸ் நிலையத்தை பொறுத்தவரை ரூ.800 கோடி செலவில் மேம்படுத்தப்பட இருக்கிறது. டெண்டா் கோரப்பட்டுள்ளது. அதில் சி.எம்.டி.ஏ. பங்கு ரூ.160 கோடியை வழங்கி உள்ளோம். வெகு விரைவில் பணி துவங்க உள்ளது.
தற்காலிகமாக அந்த வியாபாரிகள் மற்றும் பயணிகள் வசதிக்காக வடசென்னை மக்களின் வசதிக்காக ராயபுரம் பாலத்தின் கீழ் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.7 கோடி அளவில் பஸ் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம். அதற்கான பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.