மலையேற்ற பயணத்துக்கு ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை: வனத்துறை அறிவிப்பு
- ‘டிரெக்கிங்' எனப்படும் மலையேற்ற நடைபயண திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.
- 40 இடங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
சென்னை:
தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' எனப்படும் மலையேற்ற நடைபயண திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.
நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்பட மாவட்டங்களில் 40 இடங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என்பதால், இந்த மலையேற்ற நடைபயணத்துக்கு வருகிற ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்த காலக்கட்டத்தில் வெப்பநிலை உயர்வு, வறண்ட சுற்றுச்சூழல் மற்றும் காட்டு தீ நிகழ்வுகள் அதிகரிப்பால் நடைபயணிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அபாயம் ஏற்படாமல் தடுக்கப்படும் என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.