தமிழ்நாடு

ஐகோர்ட்டு உத்தரவால் உற்சாகம்: ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் 17-ந்தேதி ஆலோசனை

Published On 2025-02-13 12:25 IST   |   Update On 2025-02-13 12:25:00 IST
  • உரிமை மீட்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
  • இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் விவாதிக்கிறார்.

சென்னை:

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் கூறும்போது, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்பதை ஐகோர்ட்டு தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டம் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுவதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். இக்கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் உரிமை மீட்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் விவாதிக்கிறார். சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி இரட்டை இலை, சின்னம் விவகாரத்தில் அடுத்த நகர்வு குறித்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. சட்டவிதிகளை மாற்றி கட்சியை தவறான பாதைக்கு கொண்டு செல்கின்ற கும்பலிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News