தமிழ்நாடு

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு- ரெயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் மை பூசி அழிப்பு

Published On 2025-02-23 09:25 IST   |   Update On 2025-02-23 10:27:00 IST
  • நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
  • இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது.

மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது.

இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

மத்திய அரசும்-தமிழ்நாடு அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், 'புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க முடியாது' என்று அறிவித்தார்.

இந்த நிலையில் மத்திய அரசு இந்தியை திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் தி.மு.க.வினர் ஈடுபட்டனர்.

தி.மு.க சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் ஊரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை மட்டும் தி.மு.க.வினர் தாங்கள் கொண்டு வந்திருந்த கருப்பு மையை அதன் மீது பூசி அதனை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறிய அவர்கள் ரெயில் நிலையம் முன்பும் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியை எதிர்ப்போம், மீண்டும் மொழிப்போரை தூண்டாதே என கோஷங்கள் எழுப்பினர்.

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை தி.மு.க.வினர் அழித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News