டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு - பேரணி - மறியல் - போக்குவரத்து பாதிப்பு
- வாகனங்களில் மதுரைக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.
- 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நாயக்கர்பட்டி உள்பட 11 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஏல உரிமை வழங்கியதாக கூறப்படுகிறது.
அரிட்டாப்பட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வன விலங்குகள் பாதிக்கும். இயற்கை சூழல் கெடுவதோடு விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள், மறியல்கள் நடைபெற்றன. டங்ஸ்டன் சுரங்க திட்ட போராட்டத்திற்கு வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. கடந்த மாதம் மேலூரில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதற்கிடையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எந்த வகையிலும் தமிழக அரசு அனுமதிக்காது என அறிவித்தது.
இருப்பினும் மத்திய அரசு தற்போது வரை டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமை ரத்து குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதன் காரணமாக மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களை தற்போது வரை நடத்தி வருகின்றனர்.
அதன்படி மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்கம் சார்பில் இன்று விவசாயிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி 4 வழிச்சாலையில் நடைப்பயணமாக பேரணியாக சென்று மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 4 வழிச்சாலையில் பேரணியாக சென்றால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என கூறி போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து விவசாயிகள் மேலூரில் இருந்து வாகனங்களில் மதுரைக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.
மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டியில் இன்று காலை 9 மணி அளவில் பொதுமக்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் மதுரைக்கு புறப்பட்டனர். விவசாயிகள் போராட்டத்தையொட்டி வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலூர் நகரில் காய்கறி, நகைக்கடை, பேன்சி ஸ்டோர், பல் பொருள் அங்காடி, கட்டுமான பொருட்கள் வியாபாரம் செய்யும் கடைகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அதேபோல் மேலூர் அருகில் உள்ள வல்லாளபட்டி, வெள்ளலூர் நாடு, கருங்காலக்குடி, கீழவளவு மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து வியாபாரிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்கள் கடைகளை அடைத்துள்ளனர்.
ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் விவசாயிகள் தங்கள் ஊர்களிலிருந்து வாகனங்களில் புறப்பட்டு நரசிங்கம்பட்டி வந்தடைந்தனர். அங்கிருந்து 10 மணி அளவில் புறப்பட்டு ஆயிரக்கணக்கான வாகனங்களில் மதுரை தமுக்கம் புறப்பட்டுச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.