தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 வழங்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

Published On 2024-12-29 15:44 GMT   |   Update On 2024-12-29 15:44 GMT
  • அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு.
  • வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஃபெஞ்சல் புயல், அதிகனமழை உள்ளிட்டவற்றால், அனைத்து மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடமைகள் எல்லாம் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதன்மூலம் ஏற்பட்ட இழப்பினைச் சரி செய்வதற்கே அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவைப்படும். இதனால் தமிழக மக்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

இந்த நிலையில், தி.மு.க. அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பின்மூலம், பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாட முடியாத நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக மக்கள் 2025 பொங்கல் திருநாளை சிறப்புறக் கொண்டாடும் வகையில், எவ்வித பாகுபாடின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News