கொடைக்கானலில் மீண்டும் நடுங்க வைக்கும் உறைபனியால் மக்கள் அவதி
- காலை நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.
- கொடைக்கானலில் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உறைபனி என்பது அபூர்வமான நிகழ்வாகவே இருக்கும்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது. மாலை 4 மணிக்கு மேல் நீர்ப்பனியால் குளிர் தொடங்கி விடுகிறது. இரவு 8 மணிக்கு மேல் கடும் குளிர் நிலவுகிறது. இரவு 7 மணிக்கு மேல் சாலையில் நிற்கும் வாகனங்களில் கனமழை பெய்தது போல் நீர் நிரம்பி காணப்படுகிறது. இரவு 7 மணிக்கு 10 டிகிரி வரை குளிர் அதிகரிக்கிறது. காலை நேரங்களில் புல்வெளிகளில் கடும் உறைபனி நிலவி வருகிறது. பனியின் தாக்கம் காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக இரவு 8 மணி முதல் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
காலை நேரங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் இரவில் விரைவாக இருப்பிடங்களுக்கு செல்வதும் காலை நேரங்களில் தாமதமாக வெளியில் வருவதுமாக உள்ளனர். இவ்வாறு கடும் குளிர் நிலவும் நிலையில் ஸ்வெட்டர், குல்லா விற்பனை மட்டுமே அதிகரித்துள்ளது.
ஏரிச்சாலை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் இரவு 10 மணி வரை கடைகள் நடத்துபவர்கள் விரைவாகவே கடைகளை அடைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புல்வெளி மற்றும் நீர்நிலைகளில் உறைபனி படர்ந்திருப்பதால் அதனை சுற்றுலா பயணிகள் படம் எடுத்து செல்கின்றனர்.
கொடைக்கானலில் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உறைபனி என்பது அபூர்வமான நிகழ்வாகவே இருக்கும். இந்த ஆண்டு டிசம்பர் மாத கடைசியில் பனியின் தாக்கம் சற்று அதிகரித்து உறைபனி ஓரிரு நாட்கள் தென்பட்டு மறைந்தது.
அதன் பிறகு மீண்டும் உறைபனி நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளும் முடங்கி வருகிறது.