பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 10-ந்தேதி நடக்கிறது
- கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
- கோவையில் இருந்து பேரூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
பேரூர்:
கோவை மாவட்டம் பேரூரில் பிரசித்தி பெற்ற பச்சை நாயகி உடனமர் பட்டீசுவரசுவாமி கோவில் உள்ளது. மேலைச்சிதம்பரம் என அழைக்கப்படும் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நடந்தது.
ராஜகோபுரம், விமான கோபுரங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசப்பட்டு தற்போது கோவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 10-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான கும்பாபிஷேக விழா தொடங்கி நடந்து வருகிறது.
இன்று காலை பிள்ளையார் வழிபாடு, புனித தீர்த்தங்கள் மற்றும் அக்னி அழைத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 4.35 மணிக்கு முதற்கால யாக வேள்வி பூஜை தொடங்குகிறது.
8-ந் தேதி காலை 8.45 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 108 மூலிகை பொருட்கள் ஆகுதி, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, மலர் போற்றுதல் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
9-ந்தேதி காலை 9 மணிக்கு நான்காம் கால வேள்வியும், மாலை 4.15 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜை, இடைகலை, பிங்கலை பூஜைகளும் நடக்கின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 10-ந் தேதி காலை 9.05 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடக்கிறது. அன்று காலை 5.45 மணிக்கு ஆறாம் கால வேள்வி பூஜையும், காலை 9.50 மணிக்கு ராஜகோபுரம் அனைத்து விமானங்கள் மற்றும் திருச்சுற்று தெய்வங்கள் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழாவும், 10.05 மணிக்கு பட்டிப்பெருமான், பச்சைநாயகி அம்மன், நடராச பெருமான், தண்டபாணி ஆகிய மூலமூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பேரூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.