தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
- ரெயில்வே பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி வாசகம் அழிக்கப்பட்டு தமிழ் வாசகம் மட்டும் இருப்பது போன்று போஸ்டர் காணப்படுகிறது.
- போஸ்டர் ஒட்டியது யார் என்பது குறித்து தெரியவில்லை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மும்மொழி கொள்கை தீவிரமாகி வருகிறது. மும்மொழி கொள்கைக்கு எதிராக தி.மு.க. அரசு குரல் கொடுத்து வரும் நிலையில், மும்மொழி கொள்கை ஏன் அவசியம் என்பது குறித்து மாநில பா.ஜ.க. வாதம் செய்து வருகிறது.
மீண்டும் இந்தி திணிப்பை அனுமதிக்கமாட்டோம் என்று அரசு சார்ந்த அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இந்தியை எதிர்க்கும் யாரெல்லாம் இந்தி மொழி உடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்து அண்ணாமலையும் தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே, அண்ணாசாலைக்கு வந்து பார்க்கட்டும் என்று துணை முதலமைச்சர் கூற அண்ணாசாலைக்கு நான் தனியாக வருகிறேன். ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் அங்கு வரட்டும்.. இடத்தை கூறுங்கள்' என்று அண்ணாமலை கூற தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 'தமிழ் வாழ்க' என்கிற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதுவும் ரெயில்வே பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி வாசகம் அழிக்கப்பட்டு தமிழ் வாசகம் மட்டும் இருப்பது போன்று போஸ்டர் காணப்படுகிறது. இதனை ஒட்டியது யார் என்பது குறித்து தெரியவில்லை.
இதனிடையே இன்று சர்வதேச தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 'தமிழ் வாழ்க' என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.