கபடி வீராங்கனைகள் பத்திரமாக உள்ளனர்: தமிழக அரசு விளக்கம்
- மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின்போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டனர். அதோடு பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
தமிழ்நாடு- பீகார் இடையிலான போட்டியில் ஒருதலைபட்சமாக புள்ளிகளை வழங்கியதால் பயிற்சியாளர் என்ற முறையில் தமிழக அணி சார்பில் முறையிட்டபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கபடி வீராங்கனைகள் (மாணவிகள்) பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் அனைவரும் பத்திரமாக திரும்ப பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பயிற்சியாளரை கைது செய்தததாக கூறுவது தவறு. அவர் கைது செய்யப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி "வீராங்கனைகள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டு, நாளை ரெயில் மூலம் தமிழ்நாடு திரும்புகின்றனர்" என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.