ரஜினிகாந்த்துடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திடீர் சந்திப்பு
- திருமணம் வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி நடக்கிறது.
- கட்சி பாகுபாடு பாராமல் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி நடக்கிறது.
கோவை ஈச்சனாரி செல்வம் மகாலில் நடைபெற உள்ள இந்த திருமண விழாவுக்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், அவரது குடும்பத்தினரும் நேரில் சென்று வழங்கி வருகிறார்கள்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை எஸ்.பி.வேலுமணி வழங்கி வருகிறார்.
இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்தை, எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார். எஸ்.பி.வேலுமணியுடன் அவரது அண்ணன் அன்பரசன் மற்றும் குடும்பத்தினர் சென்றிருந்தனர். அவர்களுடன் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் பேசினார்.
இதேபோல கட்சி பாகுபாடு பாராமல் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நடிகர்-நடிகைகள் என பல்வேறு தரப்பினருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது மகன் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஏராளமானோர் திருமண விழாவில் பங்கேற்க உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்ல திருமண விழா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.