என்ஜினீயரிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
- தொடக்கத்தில் ஆயிஷாவுக்கு சிறிய தொகை லாபமாக கிடைத்துள்ளது.
- கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆயிஷா புகார் செய்தார்.
கோவை:
கோவை சாய்பாபா காலனி சண்முகா தெருவைச் சேர்ந்தவர் ஆயிஷா ஷர்மி ஜெகன் (வயது 29). என்ஜினீயரிங் படித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆலியா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் ஆனார். அப்போது ஆலியா, ஆயிஷாவிடம் பகுதிநேர வேலை மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினார். இதைநம்பி அவருடன் ஆயிஷா தொடர்ந்து பேசத் தொடங்கினார்.
முதலில் குறிப்பிட்ட இலக்கு வழங்கப்படும் என்றும் அதை வெற்றிகரமாக செய்து முடித்து கொடுத்தால் பிறகு கூடுதல் லாபம் கிடைக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆலியா கூறியுள்ளார்.
அவர் கூறியபடி தொடக்கத்தில் ஆயிஷாவுக்கு சிறிய தொகை லாபமாக கிடைத்துள்ளது. இதனால் ஆயிஷா தொடர்ந்து முதலீடு செய்தார். மொத்தம் ரூ.5 லட்சத்து 42 பணத்தை அவர் பல்வேறு தவணைகளில் செலுத்தி உள்ளார்.
இதற்கான லாபத்தொகையை ஆயிஷா வங்கி கணக்கில் இருந்து எடுக்க முயன்றார். ஆனால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதுகுறித்து கேட்பதற்காக தனக்கு பழக்கமான ஆலியாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டத்தை ஆயிஷா உணர்ந்தார்.
இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆயிஷா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து என்ஜினீயர் ஆயிஷாவை ஏமாற்றிய ஆலியா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.