பள்ளி ஆசிரியையை காரில் கடத்தி பாலியல் தொல்லை- செல்போன் கடை உரிமையாளர் கைது
- இளம்பெண் தச்சநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.
- இளம்பெண் பாளை டக்கம்மாள்புரம் அருகே வந்தபோது காரில் இருந்து இறங்கிவிட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கட்டாரங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜூ (வயது 38).
இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 24 வயதான ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண் தனியார் கால்நடை ஆஸ்பத்திரியில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். அவர் தினமும் வேலைக்கு சென்று வரும்போது அவருக்கும், ராஜூவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.
இதனிடையே இளம்பெண் நெல்லையை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இதனால் ராஜூவுக்கு அந்த பெண்ணை பார்க்க முடியாமல் போய்விட்டது. இதனால் சற்று மன வேதனையில் ராஜூ இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இளம்பெண் வேலையை முடித்துவிட்டு, ஊருக்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு காரில் ராஜூ கூறி வந்துள்ளார். பேசிக்கொண்டே ஊருக்கு போகலாம். ஊரில் கொண்டு விடுகிறேன் என்று ராஜூ அந்த இளம்பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் இளம்பெண் அச்சம் அடைந்து காரில் ஏற மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜூ, அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றார். பின்னர் அவரை ஊருக்கு அழைத்து செல்லாமல், காரில் குமரி நோக்கி அழைத்து சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுக்க ராஜூ திட்டமிட்ட நிலையில், அதனை அறிந்து கொண்ட இளம்பெண் பாளை டக்கம்மாள்புரம் அருகே வந்தபோது காரில் இருந்து இறங்கிவிட்டார்.
பின்னர் அவரிடம் இருந்து தப்பிக்க போலீசுக்கு போன் செய்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர போலீசார், ராஜூவை பிடித்து தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், காரில் வைத்தே இளம்பெண்ணை ராஜூ பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து பெண்ணை கடத்த முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர்.