தமிழ்நாடு

சென்னையில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்காதது ஏன்?- செங்கோட்டையன் விளக்கம்

Published On 2025-02-24 11:07 IST   |   Update On 2025-02-24 11:07:00 IST
  • பிறந்த நாள் என்பதால் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன்.
  • நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார்.

அப்போது செங்கோட்டையன் பேசும் போது,

அ.தி.மு.க ஒரு அசைக்க முடியாத இயக்கமாகும். 2026 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி வரும். இதனால் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மீண்டும் செய்து தர முடியும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்த ஆட்சியில் எந்த ஒரு நன்மையும் நடைபெறவில்லை. 2026 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றார்.

இதைத் தொடர்ந்து கோபி செட்டிபாளையத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அப்போது நிருபர்கள் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஏன்? பங்கேற்கவில்லை என கேட்டனர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், நினைவு நாளாக இருந்திருந்தால் நான் சென்னை சென்று இருப்பேன். பிறந்த நாள் என்பதால் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர உதவிகரமாக இருக்கும் என்றார்.

வெள்ளாடும், ஓநாயும் ஒன்று சேர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, இது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து செங்கோட்டையன் கிளம்பிச் சென்றார்.

Tags:    

Similar News