தமிழ்நாடு

'கருத்து கந்தசாமி' எங்கள் கட்சிக்கு சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை- சண்முகம்

Published On 2025-03-04 08:13 IST   |   Update On 2025-03-04 09:02:00 IST
  • 'நுணலும் தன் வாயால் கெடும்' என்று சொல்வார்கள் சீமான் தன்னுடைய வாயாலே தன்னை கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
  • கம்யூனிஸ்டுகள் என்றாலே போராட்டக்காரர்கள் என்று தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்திய மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, பாலியல் வழக்கு குறித்து பேச தகுதியற்றவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர். காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளனர். பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்?. கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை பற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் வாய் திறக்கவில்லை என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் சீமான் கூறியதற்கு பதில் அளித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

'நுணலும் தன் வாயால் கெடும்' என்று சொல்வார்கள் சீமான் தன்னுடைய வாயாலே தன்னை கெடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு அவரது ஏராளமான ஊடக பேட்டிகள், மேடை பேச்சுகள் ஒரு உதாரணம்.

பிரச்சனைகளை பட்டியலிட்டு இதில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்தார்கள் என்று அவர் கேள்வி கேட்டு இருக்கிறார்.

அவர் பட்டியலிட்ட எல்லா பிரச்சனைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டத்தில் நின்று, பலவற்றில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.

இந்த போராட்டம் நடைபெற்ற காலம் முழுவதும் சீமான் கருத்து கந்தசாமியாகவும், வாயால் வடை சுடுகிற வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தார். அவர் களப் போராட்டத்திற்கு என்றுமே வந்ததில்லை என்பதை சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்கள் அறிவார்கள்.

அதனால் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்களா என்ற சான்றிதழ்களை சீமான் போன்றவர்கள் வழங்க வேண்டியதில்லை. கம்யூனிஸ்டுகள் என்றாலே அவர்கள் போராட்டக்காரர்கள் என்று தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்திய மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே சீமானிடம் இருந்து கம்யூனிஸ்டுகளுக்கான சான்றிதழை பெற வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

Tags:    

Similar News