மாணவி பாலியல் வன்கொடுமை.. அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி சம்பவம்
- அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி தங்களது காதலை வளர்த்துள்ளனர்.
- நீங்கள் யார்? என்று அவர்களிடம் இருவரும் கேட்டுக் கொண்டிருந்தபோதே வாலிபர்களில் ஒருவர் மாணவர் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பலர் விடுதியில் தங்கி படிக்கிறார்கள். இவர்களின் வசதிக்காக 3 தங்கும் விடுதிகள் பல்கலைக்கழக வளாகத்தி லேயே செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வரும் இரண்டாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவி ஒருவரும், 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த மாணவரும் விடுதியில் தங்கி படித்து வருவதால் இருவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அடிக்கடி சந்தித்து பேசி தங்களது காதலை வளர்த்துள்ளனர்.
இரவு நேரங்களில் தனிமையில் சந்தித்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தனர். சம்பவத்தன்று இரவும் காதலர்களான இருவரும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 2 வாலிபர்கள் திடீரென வந்தனர். அவர்களை பார்த்ததும் மாணவனும், மாணவியும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். நீங்கள் யார்? என்று அவர்களிடம் இருவரும் கேட்டுக் கொண்டிருந்தபோதே வாலிபர்களில் ஒருவர் மாணவர் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து 2 வாலிபர்களும் சேர்ந்து மாணவியின் காதலனான 3-ம் ஆண்டு மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை மிரட்டிய வாலிபர்கள் இங்கிருந்து ஓடி விடு... இல்லையென்றால் நடப்பதே வேறு என எச்சரித்து உள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாணவர் பயந்து போய் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மாணவியை மிரட்டிய 2 வாலிபர்களும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே மாணவியை மிரட்டி கூட்டாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி கோட்டூர்புரம் போலீசில் மாணவி புகார் அளித்தார். இதன் பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை அவர் படித்து வருகிறார்.
இதே பிரிவில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவருடன்தான் அவர் காதல் வசப்பட்டு பழகி வந்துள்ளார். இந்த நிலையில்தான் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக் கழக வளாகத்தில் வைத்தே மாணவிக்கு பாலியல் கொடுமை நிகழ்ந்துள்ளது.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பி.என்.எஸ். 64 (கற்பழிப்பு) சட்டப்பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பாலியல் அத்துமீறல் சம்பவம் கடந்த 21-ந்தேதி அன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சீனியர் மாணவர்கள் சிலரே பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் முடிவில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை பாய உள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
என்ஜினீயரிங் படிப்புகளுக்கு பெயர் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள இந்த பாலியல் சம்பவம் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ்-2வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும் என்பதால் அங்கு தங்களது பிள்ளைகளை எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்பதிலும் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
இப்படி கல்விக்கு பெயர் பெற்ற பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.