தி.நகரில் 64 கண்காணிப்பு கேமராக்கள்- போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி
- நிறைய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- சென்னை நகரில் மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தி.நகர், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்த நிலையில் தி.நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இன்று ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை பார்வையிட்டார். மேலும் தி.நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தி.நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
ரெங்கநாதன் தெருவை சுற்றிலும் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தொலைந்து போவதை தடுக்க அவர்களின் கைகளில் டேக் (அடையாள அட்டை) கட்டப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளை சீக்கிரமாக கண்டுபிடிக்க முடியும்.
நிறைய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு காவல்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவை அனைத்தையும் எடுத்துள்ளோம்.
தி.நகரில் பொருத்தப்பட்டுள்ள 64 கண்காணிப்பு கேமராக்களில் முகம் கண்டறியும் வசதி இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூட்டத்தில் குற்றவாளி இருந்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியும்.
பழைய குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் எங்களிடம் இருக்கிறது. அதனுடன் ஒப்பிட்டு தி.நகரில் கூட்டத்தில் குற்றவாளிகள் இருப்பதை கண்டு பிடித்து உடனே எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும்.
தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பஸ் நிலையங்கள் உள்ளதால் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. சென்னை நகரில் மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.