தி.மு.க.விற்கும், திராவிட மாடலுக்கும் படிப்பு என்றாலே பிரச்சனை தான்- தமிழிசை சவுந்தரராஜன்
- இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.
- குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பல பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை இருக்கும்போது அரசாங்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டும் ஏன் மும்மொழிக்கொள்கை மறுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை பின்பற்றப்படுகிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு சொல்லுங்கள்.
உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், பிரபலங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் எல்லாவற்றிலும் மும்மொழிக்கொள்கை இருக்கிறது. இந்தி இருக்கிறது. நான் இந்தி என்று சொல்லவில்லை. 3-வது ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். அதை 8 வயதிற்குள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மொழியை அதிகம் கற்றுக்கொள்ளலாம்.
மாறி வரும் உலகத்தில், சாவல் நிறைந்த உலகத்தில் இன்னொரு மொழி தெரிந்தால் என்ன? குழந்தைகள் படிக்கிறேன் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை?
படிப்பு என்றாலே உங்களுக்கு பிரச்சனை தான். தி.மு.க.விற்கும், திராவிட மாடலுக்கும் படிப்பு என்றாலே பிரச்சனை தான்.
படிப்பில் நீங்கள் ஏன் பிரச்சனை செய்கிறீர்கள். குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
கேந்திரிய வித்யாலயாவில் இந்தி சொல்லிக்கொடுப்பத்தால் அங்கு சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பெற்றோர் இருக்கிறார்கள்.
நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.
இன்னொரு மொழியை அரசு பள்ளி மாணவர்கள் படிப்பதை இறுமாப்புடன் இவர்கள் மறுக்கிறார்கள்.
சாமானிய மக்களை படிங்கள் என்று சொல்வது ஆணவமா? சாமானிய மக்களை நாங்கள் படிக்க விடமாட்டோம் என்று சொல்வது ஆணவமா?
இந்த அரசாங்கம் தான் ஆணவத்தோடு செயல்படுகிறது. இதை பா.ஜ.க. கட்சி தெளிவாக எடுத்துச்சொல்வோம்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆக்டிங்கில் இருக்கிறாரா, ஷூட்டிங்கில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
ஆக்டிங், ஷூட்டிங் செய்தால் தான் மக்களை அணுக முடியும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்து இருக்கிறார்கள்.
பா.ஜ.க. 2026-ஐ நோக்கி பலமாக வெற்றி நடைபோடுகிறோம்.
வாய்ப்புகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுங்கள். வேலைவாய்ப்பை மற்ற குழந்தைகளுக்கு, சாமானிய மக்களுக்கு ஏற்படுத்த ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. கற்றுக்கொடுக்க கல்வித்துறை இருக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சனை.
மாணவர்களின் கல்வியை பாதிப்பது மத்திய அரசு கிடையாது, தர்மேந்திர பிரதான் கிடையாது.
மாணவர்களின் கல்வியை பாதிப்பது அன்பில் மகேஷ், மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.