தமிழக சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும்- ஆளுநருக்கு விஜய் வலியுறுத்தல்
- தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது மரபு.
- ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
தமிழக சட்டசபையில் இன்று உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றது தொடர்பாக தவெக தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.