- மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் போராடுவது அவசியமானது.
- இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.
சென்னை:
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டுள்ளது எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் நேரடியாக கலந்து கொள்ள திட்டுமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம், மீனவர்கள் பிரச்சனையை விஜய் கையிலெடுத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு திருமாவளவன், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி. மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் போராடுவது அவசியமானது என்று கூறினார்.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் திருமாவளவன் பேசுகையில், தற்போது, கட்சி துவங்கினாலே, யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன. இப்போதே 20 சதவீதம், 24 சதவீதம் என்று எல்லாம் எழுதுகிறார்கள். அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து செய்தியை பூதாகரப்படுத்துகின்றன. இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த சமூகமும் இந்த ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.