நடிகர்களால் அரசியலில் சாதிக்க முடிவதில்லை- திருமாவளவன்
- பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
- தமிழக இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வேங்கிக்கால்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்விக் கொள்கை என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தியை திணிக்க முயல்கிறது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் திட்டத்தில் ஒன்றானது. ஒரே நாடு ஒரே மொழி என்பதை அடையும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது.
தனி நபர்கள் இந்தியை கற்க வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியா முழுவதும் ஒரே மொழியை பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை தான் எதிர்க்கிறோம். கல்விக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதியை தருவோம் என்பது ஏற்புடையதல்ல.
இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை கண்டிக்கிறது. மார்ச் 5-ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த முயற்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை அமைந்தால் தமிழ்நாடு 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆறுதல் அளிக்கிறது.
நடிகர் விஜய் தேர்தலை சந்தித்தால் தான் அவரை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா, அங்கீகரிக்கிறார்களா என்பது தெரியவரும். பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத நிலையில் அ.தி.மு.க.வையோ, தி.மு.க.வையோ பலவீனப்படுத்த முடியும் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள். சினிமா புகழை மட்டும் வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்டி விட முடியும் என்று சொல்லிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள். தமிழக இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
தமிழக இளைய தலைமுறையினரை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.