2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பெற உள்ள வெற்றிக்கு அச்சாரம் இது- செல்வப்பெருந்தகை
- வகுப்புவாத, பிரிவினைவாத சிருலைவு சக்திகளுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.
- தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பெற உள்ள வெற்றிக்கு அச்சாரம் இது என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட, தி.மு. கழசு வேட்பாளர் திரு. வி.சி. சந்திரகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட தொன்னூறாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்.
இது தமிழகத்தில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுகிற ஆட்சியின் சாதனைகளுக்கு கிடைத்த பரிசாகும். வகுப்புவாத, பிரிவினைவாத சிருலைவு சக்திகளுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் சமீபகாலமாக மதநல்லிணக்கத்தையும், சமூகநீதியையும் சீர்குலைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிற பிற்போக்கு சக்திகளுக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு உரிய பாடத்தை வழங்கியிருக்கிறது. வெற்றி பெற்றுள்ள தி.மு. கழக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கும் நனர்நியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெற்ற வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பெறப் போகின்ற வெற்றிக்கு அச்சாரமாக அமைய இருக்கிறது. இத்தகைய வெற்றியை பெறுவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.