கோவையில் 18-ந்தேதி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின்
- திறன் மேம்பாட்டு மையங்களை தொடங்கி வைக்கிறார்.
- கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா நடக்கிறது.
கோவை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 18-ந் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது, திறமையான பணியாளர்களை உருவாக்குவது தான்.
தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் 31 அரசு பொறியியல் கல்லூரிகளில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.30.62 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மையங்களின் தொடக்க விழா வருகிற 18-ந் தேதி கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது. இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திறன் மேம்பாட்டு மையங்களை தொடங்கி வைக்கிறார்.
அத்துடன் அன்றைய தினம் மாணவர்கள் சிலருக்கு பணி நியமன உத்தரவு ஆணைகளையும் வழங்க உள்ளார். மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து நிரல் திருவிழா 2.0 என்ற திட்டமும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் துணை முதல்-அமைச்சர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு கோவை-சத்தி ரோட்டில் உள்ள பெத்தேல் மாநகர பேராலயத்தில் பெந்தேகொஸ்தே சபைகளின் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா நடக்கிறது.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவைக்கு வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து, மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் வருகையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.