திருச்சி சூரியூரில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம்- உதயநிதி ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
- மற்ற விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் மைதானம் உருவாகிறது.
- ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலுக்கு எதிர்புறம் மக்கள் அனைவரும் உட்காரும் வகையில் கட்டப்பட இருக்கிறது.
திருச்சி:
திருச்சி சூரியூரில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இது மிகவும் புகழ்பெற்றதாகும்.
திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும். இத்தகைய பிரசித்திபெற்ற சூரியூரில் ரூ.3 கோடியில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை(புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் துணை முதலமைச்சர் உதையந்தி ஸ்டாலின் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த மைதானம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக அமைய உள்ளது. கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் மைதானம் உருவாகிறது.
இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலுக்கு எதிர்புறம் மக்கள் அனைவரும் உட்காரும் வகையில் கட்டப்பட இருக்கிறது. மேலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக அமர்ந்து போட்டிகளை பார்க்கும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அடுத்தப்படியாக 2-வது ஜல்லிக்கட்டு மைதானமாக 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.