வேலூர் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
- வேலூரில் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இந்த வழக்கில் ஒரு இளம் சிறார் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி இரவு, பெண் மருத்துவர் ஒருவர், தனது நண்பருடன் சென்றபோது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பெண் மருத்துவரை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ஒரு இளம் சிறார் உள்பட பார்த்திபன், மணிகண்டன். சந்தோஷ்குமார், பரத் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு, மகளிர் நீதிமன்றத்திலிருந்து மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பார்த்திபன், பரத்,சந்தோஷ் குமார் ,மணிகண்டன் ஆகிய நான்கு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.