120 மாவட்டச் செயலாளர்களை நியமித்து வெள்ளி நாணயம் வழங்கிய விஜய்
- கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் இன்று (வெள்ளிக் கிழமை) ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி, தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவது பற்றி இன்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முதலாம் ஆண்டு விழாவின்போது எத்தனை கொண்டாட்டங்கள் மேற்கொள்வது என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்டச் செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர்கள் என தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக 120 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தவெகவில் புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதத்துடன் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.