2026-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு விஜய் புதிய வியூகம்: பிரசாந்த் கிஷோருடன் 3 மணி நேரம் ஆலோசனை
- சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
- தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் நடிகர் விஜய்தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது முதல் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய் வருகிற சட்ட மன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என்றும் நம்மோடு கூட்டணி சேரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்போம் என்றும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். விஜய் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஆரோக்கியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது விஜய் கட்சியின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றிய தகவல்களை பிரசாந்த் கிஷோர் கேட்டு தெரிந்து கொண்டார்.
தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான வியூகங்கள் என்னென்ன என்பது பற்றி அப்போது கலந்த ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்கிற கருத்து பரவலாகவே பேசப்பட்டு வரும் நிலையில் அது பற்றி நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது எந்தவித ஆலோசனையும் நடைபெற வில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
விஜய்யை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனை மையப் படுத்தியே நேற்றைய ஆலோசனையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.
எனவே தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்காக களத்தில் உள்ள கட்சிகளோடு கைகோர்த்து தேர்தலை சந்திக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக ஆதவ் அர்ஜுனா மூலமாக காய் நகர்த்தி புதிய கூட்டணி அழைப்பதற்கு விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன்மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய் அதிரடியாக களமிறங்க திட்ட மிட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனால் இன்னும் போகப்போக விஜய்யின் அரசியல் வேகம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளது.