தமிழக பட்ஜெட்டில் மக்களை கவரும் திட்டங்கள் இடம் பெறுமா?
- பிப்ரவரி 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- தேர்தல் நடக்கவுள்ள 2026-ம் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அரசால் தாக்கல் செய்ய முடியும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதியன்று ஆட்சிப்பொறுப்பேற்றது. இதுவரை 3 முழு பட்ஜெட்களை தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ளது. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தயாரித்து இறுதி செய்யும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. அதற்கான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கின. பிப்ரவரி 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பட்ஜெட் தி.மு.க. அரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாக அமைந்துள்ளது. தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதி கள் நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முறியடிக்க இது ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பாக அமைகிறது.
மக்களைக் கவரும் புதிய திட்டங்களை அறிவிக்க இந்த சந்தர்ப்பத்தை அரசு பயன்படுத்தவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியிருந்தபடி மகளிருக்கு விலையில்லா பஸ் பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இல்லாத திட்டங்களான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், மாணவர்களின் திறன் வளர்க்க நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றையும் இந்த அரசு நிறைவேற்றி உள்ளது.
ஆனால் நிறைவேற்றப்படாத சில முக்கிய திட்டங்களும் உள்ளன. குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி. கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, கியாஸ் சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல் விலை குறைப்பு போன்ற திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
ஏற்கனவே நிதிச்சுமை உள்ள நிலையிலும், மத்திய அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் முழுமையாக கிடைக்கப் பெறாத நிலையிலும், இந்த பட்ஜெட் தமிழக அரசுக்கு சவாலான பட்ஜெட்டாக இருக்கும்.
கடந்த 4 ஆண்டுகளாக பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி, மனதில் இடம் பிடித்துள்ளது. அதை மேலும் உறுதி செய்ய, பெண்களுக்கான கூடுதல் திட்டங்கள், இந்த பட்ஜெட் மூலம் தீட்டப்பட வாய்ப்புள்ளது.
அவர்களுக்கான நிதியுதவியை உயர்த்தி வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம். தேர்தல் நடக்கவுள்ள 2026-ம் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அரசால் தாக்கல் செய்ய முடியும் என்பதால், மக்களைக் கவரும் திட்டங்கள், இந்த பட்ஜெட்டில்தான் முழுமையாக வெளியிட முடியும்.
எனவே இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் பல்வேறு திட்டங்கள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.